ஆசிய பாரா விளையாட்டு போட்டி.. சாதனை படைத்த சிறுமிக்கு காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா..!
சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி வில்வித்தையில் இரு தங்கபதக்கங்கள் வென்றிருந்தார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஒரே பதிப்பில் இரு தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார்.
கைகள் வளர்ச்சி குன்றிய 16 வயதான ஷீத்தல் தேவியின் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இந்நிலையில், ஷீத்தல் தேவியின் சாதனையை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், ஷீத்தல் தேவியின் வில்வித்தை வாழ்க்கை பயணத்தின் வீடியோவை பதிவேற்றம் செய்து, 'இனி என் வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகளைப் பற்றி நான் ஒருபோதும் குறை சொல்லமாட்டேன். ஷீத்தல் தேவி, நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஆசிரியர்.
தயவுசெய்து எங்கள் வரம்பில் இருக்கும் எந்த காரையும் தேர்ந்தெடுங்கள், நாங்கள் அதை உங்களுக்கு வழங்குவோம் மற்றும் அதை உங்கள் பயன்பாட்டுக்கு தகுந்தவாறு மாற்றி தருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதள பயனர்களிடமிருந்து பெரும்பாலான அன்பைப் பெற்றது மற்றும் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டது.