எப்போதும் போதையில் தள்ளாட்டம்.. வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடியாக சஸ்பெண்ட்..!!

 

பணி நேரத்திலேயே மது போதையில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (53). பாலக்கோட்டில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். பணி நேரத்திலேயே  அடிக்கடி மது குடித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து சங்கர் மீது இரண்டாண்டுக்கு முன்பு புகார்கள் வந்தன.

இதையடுத்து அவர், அப்போதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் பணி நேரத்திலேயே குடித்துவிட்டு வருவதும், அலுவலகத்திலேயே மதுபானம் குடிப்பதுமாக இருந்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் இவருக்கு மதுபானங்களை கையூட்டாக வாங்கிக் கொடுத்து, ஒப்பந்தப் பணிக்கான 'பில்' தொகை காசோலைகளை பெற்றுச் செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு, ஒப்பந்ததாரர் ஒருவர் அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதை சங்கர் தனது மேஜை டிராயரில் வைத்து இருந்ததை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி விசாரணை நடத்தினார். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.