undefined

உலகக்கோப்பை வரலாற்றில் சாதனை படைத்த ஆப்கான் வீரர்.. முதல்முறையாக சதமடித்து அசத்தல்..!!

 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் சதமடித்து சாதனை படைத்துள்ளார். 

உலகக்கோப்பை தொடரின் 39வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 25 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து குர்பாஸ் அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா, இப்ராஹிம் உடன் இணைந்து மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹ்மத் ஷா 30 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இப்ராஹிம் சத்ரான் அரைசதம் விளாசினார். அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தொடக்க ஆட்டக்காரராக இப்ராஹிம் சத்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அபாரமாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 131 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சதமடித்ததன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் சத்ரான் பெற்றார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.