ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

 
 

இன்றுடன் ஆடி முடிவடைகிறது. ஆடி போய் ஆவணி வந்தால் டாப்பா வரலாம் என்பது தமிழ் சினிமாவின் பிரபலமான டயலாக். உண்மையில் ஆடிக்கு பிறகு நன்மைகள்  கூடி வரும் என்பதே முதுமொழி. தமிழ் மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதத்திற்கும்  தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முதல்  பங்குனி மாதம் வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு.

அதில் ஆவணி மாதத்தில் தான் சூரியன் சொந்த வீட்டில் வலுவாக அமருவார். பொதுவாக சூரியனே ஆத்மகாரகனாகவும், பிதுர்காரகனாகவும்  அழைக்கப்படுகிறார். இதனால் சூரியன் வலுவடையும்  போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலன்களை பெறலாம் என்பது ஜோதிட வல்லுனர்களின் வாக்கு.அதிலும் குறிப்பாக ஆவணி மாதங்களில்  வரும் ஞாயிற்றுக்கிழமைகளில்  விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.  

ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறுகளிலும்  காலை 6.00 - 7.00 மணி வரை வரும் சூரிய ஹோரைகளில் வழிபாடு செய்வது சிறப்பு. ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.ஆவணி மாதத்தில்  சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கினால் உடல் ஆரோக்கியம் வலுப்படும்.  ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம் என்கின்றனர் வாஸ்து , ஜோதிட நிபுணர்கள். இந்த மாதத்தில்  திருமணம் செய்து கொள்பவர்கள்  வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு.


ஆடி போனதும் முகூர்த்த நாட்கள் வரிசைக்கட்டும். இந்த ஆடி முடிஞ்சதும் கல்யாணத்தை பண்ணிட வேண்டியது தான் என்பது காலங்காலமாக சொல்லி வரும் வழக்கு. ஆவணி மாதத்தில் என்னென்ன விசேஷம் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

பொதுவாகவே ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல உற்சவம் மிகவும் விசேஷம். கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, வளையல் விற்ற லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கியது போன்ற திருவிளையாடல் நிகழ்வுகள், சொக்கநாதர் பட்டாபிஷேகம் மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. விநாயகர், கிருஷ்ணர், சுவாமி தேசிகன் குமாரர் வரதாச்சாரியார், குலச் சிறையார், குங்கிலிய கலய நாயனார், இளையான்குடி மாறனார் ஆகியோர் ஆவணி  மாதத்தில் அவதரித்தாக கருதப்படுகின்றனர்.


அதே போல் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் வாமன அவதாரம் எடுத்த நாள். இந்த நாள் மகாபலி சக்கரவர்த்திக்கு உகந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்திக்காக வீட்டின் வாசலில் அத்தப் பூக்கோலம் போட்டு புத்தாடை உடுத்தி விதவிதமான சுவையான பதார்த்தங்கள் செய்து  மகிழ்ந்து கொண்டாடுவர். 
கிருஷ்ண அவதாரம்  இந்த ஆவணி மாதத்தில் அஷ்டமி நட்சத்திரத்தில் நடைபெற்ற தினத்தையே கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனை  பக்தி மார்க்கமாக தியானம் செய்தால் நமது வினைகள் அனைத்தும் மாண்டுவிடும். 


ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில்  விநாயகரை வணங்கி, சந்திர தரிசனம் செய்தால் வாழ்வின்  சங்கடங்கள் தவிடுபொடியாகி விடும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள். அதே போல் ஆவணி மாதத்தில் விஷ்ணு பாதாள லோகத்தில் இருந்த குதிரை முகம் கொண்ட அசுரர்களிடமிருந்து வேதங்களைக் காப்பதற்காக தானும் குதிரை முகம் வடிவெடுத்து ஹயக்கிரீவர் அவதாரம் எடுத்தார். அசுரர்களை வென்று தேவர்களை காத்தார். அதே போல் நம் வாழ்வின் தீவினைகளை அழித்து நம்மை காப்பார் என்பது ஐதீகம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!