பயணிகளிடம் தொடர் கைவரிசை.. தங்க செயினை பறித்த மூதாட்டி அதிரடியாக கைது..!!

 

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து 4பேர் கொண்ட கும்பல தொடர் கை வரிசை காட்டி தங்க ஆபரணங்களை பறித்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஷ்டபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(65). இவர் கடந்த மாதம் 19ஆம் தேதி மகளுடன் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள காவனூருக்கு செல்லும் அரசு பேருந்தில் மகளை அனுப்பிவிட்டு கீழே இறங்கி தனது கழுத்தில் கை வைத்து பார்த்தபோது 5 பவுன் தாலி செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பல இடங்களில் தேடியும் செயின் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தனலட்சுமி விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை களவாடி செல்லும் நபர்களை கண்டுபிடிக்க விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் உத்தரவின்பேரில், விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் ராபர்ட், தலைமை காவலர்கள் செந்தில் குமார், சிவா, செல்வகுமார் ஆகியோர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பெண்கள் தினமும் இரவு நேரத்தில் வந்து தங்கிவிட்டு செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது மூதாட்டி ஒருவர் பிடிபட்டார். தொடர்ந்து அந்த மூதாட்டியை போலீசார் விசாரணை செய்தபோது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவிரி நகரை சேர்ந்த துரைராஜ் மனைவி ராஜாமணி(55) என்பதும், மேலும் இவருடன் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி, ஆறுமுகம் மனைவி உமா, ஆசைத்தம்பி மனைவி கஸ்தூரி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பேருந்துகளில் செல்லும் பெண்களிடம் தாலி செயின் பறித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ராஜாமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் நான்கு பேர் மீதும் வடலூர், செங்கல்பட்டு. சிதம்பரம், மந்தாரக்குப்பம், தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி, சென்னை பூக்கடை, மாமல்லபுரம், நாமக்கல், புளியந்தோப்பு, சிவகங்கை, காரைக்குடி வடக்கு, தஞ்சாவூர் தாலுகா, பாபநாசம். தஞ்சாவூர் மாவட்ட குற்ற பிரிவு, திருச்செந்தூர், கொள்ளிடம், மணச்சநல்லூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் என ஒவ்வொரு நபர் மீதும் குறைந்த பட்சம் 20 வழக்குகள் வரை இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.