undefined

 கர்ப்பிணியை டோலி கட்டி தோளில் சுமந்து சென்ற அவலம்..!!

 
சாலை வசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி தோளில் சுமந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளன. அதே நேரத்தில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சாலை வசதி இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிக்காகவும், மருத்துவத் தேவைக்காகவும் அன்றாடம் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சியின் போது அக்கிராமத்தில் மண் சாலை அமைக்க ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் அதே  கிராமத்தைச் சேர்ந்த  ராஜகிளியின் மனைவி ராஜேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இன்று அதிகாலை திடீரென வயிற்று வலி காரணமாக துடிதுடித்துள்ளார்.

கிராமத்தை சேர்ந்த மக்கள் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி சுமந்து ஏழு கிலோமீட்டர் தூரம் டார்ச் லைட் உதவியுடன் தூக்கி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்ணை சேர்த்துள்ளனர். அங்கு சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. மேலும் கிராம மக்கள் தொடர்ந்து சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.