undefined

 அதிர்ச்சி... கண்மூடித்தனமாக ஆசிரியர் அடித்ததில் 6ம் வகுப்பு மாணவன் பார்வையிழப்பு!

 
 


உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பியில், 6ம் வகுப்பு படித்து வந்த மாணவனை, ஆசிரியர் குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது. பாதிக்கப்பட்ட ஆதித்ய குஷ்வாஹா என்ற அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மாணவனுக்கு கண்பார்வை கிடைக்கவில்லை.

நெவாரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆதித்ய குஷ்வாஹா எனும் மாணவன் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மார்ச் 9ம் தேதி, பள்ளியின் மைதானத்தில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சில மாணவர்களை அழைக்குமாறு ஆதித்ய குஷ்வாஹாவிடம், ஆசிரியர் சைலேந்திர திவாரி கூறியுள்ளார். 

மாணவன் சென்று ஆசிரியர் அழைப்பதாக கூறியும் அவர்கள் வராத காரணத்தால், ஆசிரியர் கோபத்தில் குச்சியால் ஆதித்யாவை அடித்துள்ளார். இதில் ஆதித்யாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட பிறகு சிறுவனை ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதன்பின்னர் கண் சொட்டு மருந்து போட்டு வகுப்பில் படுக்க வைத்தார்கள். ஆனால் ஆதித்யாவால் இடது கண்ணால் பார்க்க முடியவில்லை.

இது குறித்து பேசிய ஆதித்யாவின் தாய் ஸ்ரீமதி, "ஆசிரியர் குச்சியை வீசியதில் என் மகனின் கண்ணில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. நாங்கள் காவல்துறைக்கு சென்றோம், ஆனால் அவர்கள் புகாரைப் பதிவு செய்யவில்லை. கல்வித் துறை தலையிட்ட பிறகு இந்த விஷயம் விசாரிக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி கண் பரிசோதனையில், என் மகனுக்கு பார்வை சேதம் உறுதி செய்யப்பட்டது. சித்ரகூடில் உள்ள கண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட என் மகனுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தனர். ஆனால் இடது கண் பார்வையை மீட்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். 

இந்த விஷயத்தை மூடிமறைக்க ஆசிரியர் எங்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் பணம் வழங்கினார். ஆனால் நாங்கள் அதை வாங்க மறுத்து விட்டோம்” என்றார்குழந்தைகள் நலக் குழுவின் தலையீட்டைத் தொடர்ந்து, தற்போது ஆசிரியர் சைலேந்திர திவாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரி கமலேந்திர குஷ்வாஹா கூறுகையில், “கல்வி அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்