50 ட்ராக்டர்களில் குவிந்த 500 விவசாயிகள்.. 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்.!

 
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், பந்தநல்லூர் பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் மின் விநியோகம் செய்யப்படுவதால் மின்மோட்டார் இயக்க முடியவில்லை என்பதால் உயர் மின்னழுத்தம் வழங்க வேண்டும் என்றும்,

வானிலை மாற்றத்தால் கருகி வரும் நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கோவில் நிலங்களில் உள்ள வீடுகளுக்கும், விவசாய செட்டுகளுக்கும் மின் இணைப்பிற்காக கோவில் நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும், பந்தநல்லூரில் உடனடியாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், பயிர் காப்பீட்டில் தஞ்சை மாவட்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உண்மையான குத்தகை சாகுபடி செய்பவர்களையும், குடியிருப்பவர்களையும் சட்டம் 78-ன் படி அப்புறப்படுத்துவதை கண்டித்தும்,

மேலும் ஆதனுர்-குமரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்படும் தடுப்பணைக்கு மேற்கே அரசு கையகப்படுத்தும் பட்டா விலை நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கு மேற்பட்ட டிராக்டர்களில் வந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பந்தலூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலைவிய நிலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.