ஹத்ராஸ் 122 பேர் பலி...  6 பேர் கைது... மெயின் குற்றவாளி சாமியார் இல்லையாம்!

 
 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலேபாபா என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது ஆசிரமத்தில் சத்சங்கம் எனப்படும் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 ஆயிரம் பேர்தான் பங்கேற்க முடியும். ஆனால் சுமார் 2.5 லட்சம் பேரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பங்கேற்க அனுமதித்துள்ளனர்.

இந்த பிரசங்கம் முடிவடைந்ததும் சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காக அத்தனை கூட்டம் ஒரு சேர முயற்சித்தது. இதில் பயங்கர நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 122 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இச்சம்பவம்  உத்தர பிரதேச போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள் பெயர்கள்தான் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் 122 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவான தேவ்பிரகாஷ் மதுக்கர் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கரின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உத்தர பிரதேச போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அங்கு நேற்று நள்ளிரவில் சென்றவர்கள் தேவ்பிரகாஷை கைது செய்தனர். இதில் அவரே முன்வந்து சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 
தேவ்பிரகாஷை பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசும் உத்தர பிரதேச போலீசார் அறிவித்திருந்தனர். முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷை ஹாத்ரஸுக்கு அழைத்து வந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று தேவ்பிரகாஷை ஹாத்ரஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதன் பிறகு அவரை காவலில் எடுத்து உத்தர பிரதேச போலீஸ் தீவிர விசாரணை நடத்த உள்ளது.

அதேநேரத்தில் போலோ பாபா சாமியார் தொடர்பாக முதலில் விசாரணைகள் நடத்தப்படும். அதன் பின்னரே மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இப்போது தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார் போலோ பாபா சாமியார். இவர் மீது ஏற்கனவே 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பல நகரங்களில் பதிவாகி இருக்கின்றன. ஆனால் உத்தர பிரதேச போலீசார் பலாத்கார வழக்குகளில் போலோ பாபா சாமியார் மீது நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக நடமாட விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.