undefined

  1000 மருத்துவப் பணியாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை... அதிர்ச்சி தரும் அறிக்கை!  

 


 
இஸ்ரேல் காஸாவின் மீது நடத்திய  தாக்குதல்களில் குறைந்தது 1,000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என காஸா மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து காஸா மருத்துவத் துறை அலுவலகம்  நவம்பர் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'பல மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. 310 க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், பலருக்கு சித்திரவதையும்,  மரண தண்டனையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகு  1,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக மருத்துவத் துறை அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது.  


இந்த மாதத்தின் தொடக்கத்தில், இஸ்ரேல் ராணுவத்தினரின் பிடியில் இருந்த மருத்துவர் அதான் அல் புர்ஷ் சிறைக்கு அனுப்பப்பட்டப் பிறகு சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். காஸாவில் சிறைபிடித்த பல மருத்துவர்களை இஸ்ரேல் சிறையில் அடைத்து துன்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து வெளியான அறிக்கையில் , இஸ்ரேல் காஸா மீது விதித்துள்ள தடையால் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் நுழைவது தடுக்கப்படுவதால் சுகாதார நெருக்கடி மேலும் மோசமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு காசாவில் நிலைமையை குறிப்பிட்டு, தொடர்ந்து குண்டுவீச்சுகள், விமானத் தாக்குதல்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது நேரடி தாக்குதல்களுக்கு உள்ளான கமால் அத்வான் மருத்துவமனையின் நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறது.  
இஸ்ரேல் இராணுவம், அந்தப் பகுதியின் சுகாதார அமைப்பை சேதப்படுத்துவதில் துரிதமாக இருந்ததாகவும், சமீபத்திய தாக்குதல்களில், கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹுசாம் அபு சாஃபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் குறிப்பிட்டுள்ளது. அவர் ஒரு அறுவை சிகிச்சை முடித்து அறையை விட்டு வெளியேறும்போது வெடிகுண்டு வீசப்பட்டதால் படுகாயம் அடைந்தார்.  


இஸ்ரேல் தனது போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பேற்று காஸாவில் சுகாதார கட்டமைப்பை அழிக்கும் வேலையைக் கைவிடவேண்டும் என சர்வதேச சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மனிதாபிமானத்திற்கான சட்டத்தின் வீழ்ச்சியை இது குறிக்கும். மேலும், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் மோதல்களுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்' என பதிவிட்டுள்ளனர்.  
இஸ்ரேலின் சமீபத்திய போர் தாக்குதல்களில் குறைந்தது 44,200 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.  அதில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  காஸாவில் நடக்கும் போர் குறித்து செய்தி சேகரிக்க வந்த 188 செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.  தொடர்ந்து காஸாவில் அகதிகள் முகாம், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!