undefined

குப்பைத்தொட்டியில் இருந்த 25 கோடி மதிப்புமிக்க அமெரிக்க டாலர்.. ஷாக்கான தூய்மை பணியாளர்..!!

 

25 கோடி மதிப்புள்ள  அமெரிக்க டாலரை துப்புரவு பணியாளர் கண்டுபிடித்த சம்பவம் பகீரை கிளப்பியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுலைமான் ஷேக், பெங்களூருவில் துப்புரவு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி நாகவரா ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டார். அப்போது கறுப்பு நிறத்தில் பை ஒன்று காணப்பட்டது.

அதன் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரம் கவனித்த நிலையில், பைக்கு சொந்தக்காரர்கள் யாரும் வராத காரணத்தால் அதை எடுத்து கொண்டு தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு திறந்து பார்த்த போது வெளிநாட்டு பணம் இருந்தது. அதுவும் ஏகப்பட்ட நோட்டுகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதில் ஏதும் விபரீதம் இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார். உடனே தனது மேற்பார்வையாளர் தவுஹிதுல் இஸ்லாம் என்பவரை சந்தித்து தெரிவித்தார். இதையடுத்து சமூக ஆர்வலர் கலீமுல்லா என்பவரின் உதவியுடன் போலீசாரிடம் சென்றனர். நவம்பர் 5ஆம் தேதி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த அதிகாரி பி.தயானந்தாவிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் ஆய்வு செய்ததில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருப்பது தெரியவந்தது.   சம்பந்தப்பட்ட பணத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் காண்பித்துள்ளனர். அவர்கள் ஆய்வு செய்ததில் போலியான நோட்டுகள் என்று கூறினர்.ஆனால் அதற்குரிய அதிகாரப்பூர்வ அறிக்கையை தர மறுத்துவிட்டனர். அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபோன்று பணம் தொடர்பான விவகாரங்களில் வழக்கமாக அந்த வங்கியை தான் பெங்களூரு போலீசார் தொடர்பு கொள்வது வழக்கம் என்று கூறுகின்றனர்.

தற்போதைய சூழலில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களும் போலி என்று தெரிகிறது. இதற்கிடையில் பரபரப்பூட்டும் மற்றொரு விஷயம் அரங்கேறியுள்ளது. தவுஹிதுல் இஸ்லாமை மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்து கண்ணை கட்டி கடத்தி சென்றுள்ளனர். அந்த பணம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதை போலீசில் ஒப்படைத்து விட்டதாக கூறிய நிலையில் மறுநாள் காலை வேறொரு இடத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். மீண்டும் போலீசிற்கு சென்றால் அவ்வளவு தான் என்று எச்சரிக்கை விடுத்தது அதிர்ச்சி அளித்துள்ளது.