undefined

பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய விருதை அதிபர் முகமது இர்பான் வழங்கினார்!

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதை அந்நாட்டின் அதிபர் முகமது இர்பான் வழங்கி கவுரவித்தார். 

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கான தனது அரசு முறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக நைஜீரியா சென்று, அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கயனா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கயானா அதிபர் முகமது இர்பானுடன் சேர்ந்து பிரதமர் மோடி மரக்கன்று நட்டார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்' (The Order of Excellence) விருது வழங்கப்பட்டுள்ளது. கயானா அதிபர் முகமது இர்பான், பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கி கவுரவித்தார். இதன்மூலம் கயானாவின் உயரிய தேசிய விருதை பெறும் 4-வது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனைக்காகவும், வளரும் நாடுகளின் உரிமைகளை உலக அரங்கில் நிலைநாட்டியதற்காகவும், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை செய்ததற்காகவும், இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது அர்ப்பணிப்புக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டதாக கயானா அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருதை இந்திய மக்களுக்காகவும், இந்தியா-கயானா மக்களிடையே நிலவும் வரலாற்று உறவுக்காகவும் அர்ப்பணிப்பதாக மோடி தெரிவித்தார். மேலும் இந்தியா-கயானா நட்புறவை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு தனது அரசு முறை சுற்றுப்பயணம் ஒரு சான்றாகும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கயானாவின் உயரிய கவுரவமான 'தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்' விருதை எனக்கு வழங்கியதற்காக அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு மனப்பூர்வமான நன்றி. இது 140 கோடி இந்திய மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், "கயானாவின் மிக உயரிய தேசிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டிருப்பது, இந்தியாவிற்கு மற்றொரு சிறப்பான தருணம். உலகளாவிய தெற்கு பிராந்தியத்தின் உரிமைகளுக்காக பிரதமர் மோடி பாடுபடுவதையும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை உலகத்துடன் பகிர்ந்துகொள்வதையும் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவரது தொலைநோக்கு தலைமைக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!