வீட்டில் தினசரி பூஜையில் செய்ய வேண்டியது செய்ய வேண்டியது என்ன?
உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் நமக்கான கடமைகள் ஏராளம். இதனால் நமது பணிகள் காலையிலேயே தொடங்கி விடுகின்றன. எத்தனை அவசரமாக இருப்பினும் நம்மை படைத்து காத்து நிற்கும் இறைவனுக்காக ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி எளிய முறையில் பூஜை செய்வதும் நம் கடமைகளில் ஒன்று என்கின்றன நமது இந்து மத சாஸ்திரங்கள்.
அதன்படி தினசரி பூஜையில் செய்யவேண்டியவை குறித்து எளிய விளக்கம் அளிக்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.
முதலில் நாம் பூஜை அறையில் முதல் நாள் பூஜையில் வைத்த பழைய பூக்கள், பழைய ஊதுபத்தி சாம்பல் ஆகியவற்றை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக வீட்டு பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை பூவால் எடுத்து இறைவனின் பாதத்தில் இரண்டு சொட்டு சமர்ப்பித்து “சமர்ப்பயாமி” என்று கூறி அபிஷேகத்தை முடித்து விடலாம்.
தினசரி என்ன மலர் கிடைக்கின்றதோ அதனை வைத்து இறைவனை பூஜை செய்வது சிறப்பு. பூக்கள் கிடைக்கவில்லை என்றால் தெய்வத்தின் மந்திரங்களை கூறியும் இறைவனை வழிபடலாம்.நல்ல வாசனை உள்ள ஊதுபத்தி அல்லது தூபத்தை காட்ட வேண்டும். பூஜையின் போது கண்டிப்பாக குல தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.
உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள்,பால் வீட்டில் சமைத்த உணவுகள் என எது இயலுமோ அதை நைவேத்தியமாக படைக்கலாம். பூஜையை முடிக்கும் முன் கற்பூர ஆரத்தி அல்லது தீப ஆரத்தி காட்டுவது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். பூஜையின் கடைசி கட்டமாக நாம் இறைவனை நினைத்துக் கொண்டு கண்களை மூடி “இந்த பூஜையில் ஏதேனும் சிறு தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டும்.” என இறைவனிடம் கேட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.